ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதராபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள்வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்டபிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
குஜராத்தை அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2-ஆவது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா, மேற்கில் கர்நாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டமான யானம் என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் காக்கிநாடா நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
Comments
Post a Comment